இந்தியாவில் மரண தண்டனை : புள்ளி விபரம்

      இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின் தூக்கிலிடப்பட்ட 52வது குற்றவாளி அஜ்மல் கசாப். எனினும், மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டு இருக்கலாம் என்று பி.யு.சி.எல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் ஆட்டோ சங்கர். அவர் 1995ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அதன்பின், 2004ம் ஆண்டு தான், கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி என்பவர் கொல்கத்தாவில் தூக்கிலிடப்பட்டார். கடைசியாக, இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று, பாட்டியாலா மத்திய சிறையில், பல்வந்த் சிங் ராஜோனா என்பவரை தூக்கிலிட தயாராக இருந்தனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பியந்த் சிங்கை கொலை செய்த வழக்கில் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.   ஆனால், உலகம் முழுவதும் இருந்து சீக்கியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடைசி நேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு தடை செய்தது. தற்போதைய நிலையில், 309 தூக்கு தண்டனை கைதிகள் நாடு முழுவதும் உள்ளனர். இதில், மகராஷ்டிராவில் அஜ்மல் கசாப் தவிர்த்து 38 பேர் உள்ளனர். நாட்டிலேயே அதிகமாக பீகாரில் 80 தூக்கு தண்டனை கைதிகளும், உத்தரபிரதேசத்தில் 72 கைதிகளும் உள்ளனர். தற்போதைய நிலையில், குடியரசுத் தலைவர் வசம் 26 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ன. இவற்றில், சில மனுக்கள் 1992ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன. மிகவும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே மரண தண்டனை என்பது இந்தியா உள்பட 96 நாடுகளில் தான் விதிக்கப்படுகிறது.
-பசுமை நாயகன்