பாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை


   சாலையோரக் கடைகளில் உணவுப் பொருட்கள் போதிய சுகாதாரப் பாதுகாப்புடன் தயாரிக்கப்படுவதில்லை என்பது பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு. இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் 250 க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளால் இத்தகைய நோய்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமையல் செய்யும் முன்னர் கைகளைக் கழுவத் தவறுவது, கைகளைக் கழுவாமல் உணவு உட்கொள்வது, முறையாகச் சமைக்கப்படாத உணவுகள், முறையாகப் பதப்படுத்தாத பால் மற்றும் தண்ணீர் போன்ற காரணங்களால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பது மருத்துவர்களின் கருத்து.
கிருமிகள் உடலுக்குள் புகுந்து, சில மணி நேரங்கள் முதல், சில நாட்கள்வரை கடந்த பின்னர்தான் நோய்க்கான அறிகுறி தென்படத் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், உள்ளே செல்லும் நுண்கிருமிகள் உணவுக்குழாய்ச் சுவர்களில் தங்கி, பல்கிப் பெருகுகத் தொடங்குகின்றன. இவற்றில் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து விடும். மற்ற சில கிருமிகளில் இருந்து வெளியேறும் விஷமானது குடலில் தங்கியிருக்கும் உணவில் கலந்து அதனை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றி விடும். வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்று இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதற்கு கால் லிட்டர் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவற்றைக் கலந்து குடிக்கத் தருவதன் மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
சமைக்கு முன்னரும், உணவு உட்கொள்ளும் முன்னரும் கைகளைக் கழுவுவதன் மூலம் சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் பெரும்பான்மையான நோய்களைத் தடுக்க முடியும்.

தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்கூட உணவுப் பாதுகாப்பு என்பது பல்வேறு தளங்களில் உறுதி செய்யப்படவேண்டியது அவசியமானதாகும்.
ஆரோக்கியமான உணவு, தூய்மையான சுற்றுப்புறம், பராமரிப்பு முதல் பறிமாறுதல் வரை சுகாதாரம் இதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த சட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் உணவக உரிமையாளர்கள், பல்வேறு நோய்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுப்புறச் சுகாதார கேட்டிற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புகின்றனர்.
உணவு சமைக்க பயன்படுத்தப்படும் குடிநீரில் கூட குறிப்பிட்ட அளவிற்கு மேல் குளோரின் இருப்பதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புவதோடு அதில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என ஓட்டல் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு என்பது உடல் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயமாக உள்ளதால் அதற்கான சட்ட சரத்துக்களை பின்பற்ற வேண்டியது சிறு, குறு மற்றும் பெரும் உணவகங்களின் கடமை. அதேபோல, அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது அரசு அதிகாரிகளின் கடமை. எனினும், பொதுவான சூற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர் சுகாதார வல்லுனர்கள்.

வீட்டில் நாம் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, உணவகங்களில் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, அது நோயை உருவாக்காத அளவுக்கு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பிரச்சாரம் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
நாம் வீட்டிலோ, உணவகங்களிலோ உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டில் பாதுகாப்பான உணவுக்கான சட்டம் இயற்றப்பட்டது.
விளைநிலத்திலிருந்து நம் கைக்கு உணவு வரும் வரைக்கும் பல்வேறு நிலைகளில் அதனை உறுதி செய்வதற்கான அமைப்புகளும் மத்திய, மாநில அளவில் இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. நாம் வாங்கும் உணவுப் பொருள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மளிகைக் கடைகளிலும் உணவகங்களிலும் நாமே கேட்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும். தேசிய அளவிலான பிரச்சாரம் தமிழகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் சென்னையிலும் வேறு நான்கு மாவட்டங்களிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான உணவைத் தயார் செய்வதும் அதனை நியாயமான விலையில் வழங்குவதும் சாத்தியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தரக்குறைவான உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதும் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதும் பெரும் சவால்களாக உள்ளன. இதனைக் கேள்விக்கு உட்படுத்துவதுதான் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் மே மாதம் வரை ஊர்தி மூலமாகவும் விளம்பர சுவரொட்டிகள், பல்வகை ஊடகங்கள் மூலமும் இந்தப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. நடிகர்கள் ரேவதி, நாசர், சரண்யா ஆகிய்யோர் இதற்கான குறும்படங்களில் நடித்துள்ளனர். இதற்கான பயிற்சி பெற்ற 60 மாணவ தூதுவர்கள் தயாராகியுள்ளனர்.

பாதுகாப்பான உணவை உறுதி செய்ய நுகர்வோர் தரப்பிலும் விழிப்புணர்வு அவசியம். உணவுக் கலப்படத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அனைத்து நுகர்வோருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். உணவுப் பொருள்கள் வாங்கும் அனைவருக்கும் அவற்றைச் சோதித்துக் கொள்ளும் உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் சென்னை கிங் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள உணவுப் பகுப்பாய்வாளர்கள் ஆகியோரிடம் கட்டணம் செலுத்தி உணவைப் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.
உணவு பாதுகாப்பில்லாதது என்று உறுதி செய்யப்பட்டால், ஆய்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். உணவுப் பொருளின் லேபிள்களில் தயாரிப்பு தேதி, பயன்படுத்துவதற்கு உகந்த காலகட்டம், உள்ளிருக்கும் பொருள்கள் பற்றிய விவரம், அதிகபட்ச விலை, மொத்த எடை, ஊட்டச்சத்து விவரம், உணவுத் தயாரிப்பாளரின் முகவரி ஆகியவை சரிவர இடம்பெறவில்லையெனில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து 500 ரூபாய் பரிசு பெறலாம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006ன் படி பாதுகாப்பற்ற உணவை விற்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் ஆறு மாத கால கடுங்காவல் தண்டனையும் வழங்கலாம்.
பாதுகாப்பற்ற உணவினால் இறப்பு நிகழ்ந்தால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம், ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுட்கால சிறை வழங்கப்பட இந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது. தரக் குறைவான உணவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் உணவு பற்றிய திசைதிருப்பும் விளம்பரத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.
பாதுகாப்பற்ற உணவை உற்பத்தி செய்பவரே தண்டனைக்கு இலக்காவார் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 கூறுகிறது. காலாவதியான தேதிக்கு பிறகு உணவுப்பொருளை விற்பனை செய்தால் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்கு ஆளாவார். சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருளை வைத்திருந்தாலும் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்குரியவராவா
                                      -பசுமை நாயகன்