சென்னையில் ஜாலியான பசுமை பயணம்

மரம் வளர்த்து மானுடத்தை  காக்கும் "சென்னை டிரக்கிங் கிளப்' அமைப்பிற்க்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தகவல்தளத்தின் கோடனாகோடி வாழ்த்துக்கள்.  வாரவிடுமுறை நாட்களில் பல கி.மீ., தூரம் சைக்கிளில் பயணம் செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ள அமைப்பினர், ஆங்காங்கே மரங்களை நட்டும், பாசன முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கியும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் இயங்கும் "சென்னை டிரக்கிங் கிளப்' என்ற அமைப்பினருக்கு, தனி பொழுது போக்கும், பழக்க வழக்கங்களும் உள்ளன. விடுமுறை நாட்களில் காலையில் எழுந்ததும், கால்போன போக்கில் நடந்தே செல்வது, சைக்கிள் "பெடல்' போன போக்கில் பல கி.மீ., தூரம் பயணம் செய்வதுதான் இந்த அமைப்பினரின் பொழுதுபோக்கு. இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவது மட்டுமின்றி பலர் சுயதொழிலும் செய்து வருகின்றனர். முன்பு, வார விடுமுறை நாட்களில் பல கி.மீ., தூரம் சைக்கிளில் பயணம் செய்த இவர்கள், தற்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வழக்கம்:குடியிருப்புகள் உள்ள பகுதிகளிலும், ஓய்வுக்காகவும், உணவுக்காகவும் சைக்கிளை நிறுத்தும் இடங்களிலும் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்கு துவங்கும் இவர்கள் பயணம், அன்று மாலை 5 மணிக்கு தான் முடிகிறது. சென்ற இடத்தில் இரவு தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்தநாள் காலை மீண்டும் பயணம் செய்து இவர்கள் சென்னை திரும்புகின்றனர்.

மரக்கன்றுகளை தனி வாகனத்தில் இவர்கள் எடுத்துச் செல்கின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் மரம் நடும்போது, கட்டடத்தை பாதிக்காத மரக்கன்றுகளை பயன்படுத்துகின்றனர். பானை மற்றும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, அதில் சிறிய துளையிட்டு பஞ்சை அடைத்து, மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்யும் முறையையும் குடியிருப்பு வாசிகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.
                                                                                                           ஆசிரியர் : பசுமைநாயகன்