கோவை மாவட்டத்தில் மனிதர்களுக்கும், யானைகளுக்குமான மோதல்



                                கோவை      மாவட்டத்தில்      மனிதர்களுக்கும்,   யானைகளுக்குமான மோதல் விபரீத கட்டத்தை எட்டி வருகிறது. நடுத்தர வயதுடைய ஒரு யானை உயிர்வாழ ஒரு நாளைக்கு சுமார் 250 கிலோ உணவும், 150 லிட்டர் தண்ணீரும் அவசியம். ஒரே இடத்தில் இவை தொடர்ந்து கிடைப்பது சாத்தியம் இல்லை என்பதாலேயே யானைகள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. மேட்டுப்பாளையம் பகுதி கர்நாடக மற்றும் கேரள வனப்பகுதியை இணைக்கும் பகுதியாக மட்டுமல்லாமல், யானையின் வலசைப் பாதையாகவும் திகழ்கிறது. இந்த வலசைப் பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடுவதாலேயே யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர் வன அலுவலர்கள்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படல் வேண்டும்: இந்தியாவில் உள்ள 88 யானை வழித்தடங்களில், 10 வழித்தடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றன இந்திய வன உயிரின அறக்கட்டளையின் ஆய்வு முடிவுகள். உணவு மற்றும் நீர் தேடி ஒரே பாதையில் பயணிக்கும் யானைகளின் வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசு நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் வன ஆர்வலர்கள்.
கூடுதல் நடவடிக்கைகள்: அகழிகள் அமைப்பது, சோலார் மின் வேலிகள் அமைப்பது என அரசு பலவித பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் , யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க இயலாததால் தற்போது ''மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' என தண்டோரா அடித்து வருகின்றனர் கிராம மக்கள். அதே சூழலில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறுகின்றனர் வன அலுவலர்கள்.
இயற்கை பாதுகாப்பே நிரந்தர தீர்வு: வனவிலங்குகளின் இயற்கையான நடமாட்டத்திற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாப்பது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதே வன ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

                                           -பசுமை நாயகன்