யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு:விதிமுறை மீறிய ஈஷா?


        கோயமுத்தூர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேவருகின்றன. இது குறித்து புதிய தலைமுறை நடத்திய புலனாய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
    கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டும் மட்டும் 800 முறை யானைகள் காட்டைவிட்டு வெளியே வந்திருக்கின்றன. 20 பேர் யானை தாக்கி இறந்திருக்கிறார்கள். 17 யானைகள் மின்சார வேலிகள், ரயில் பாதைகள் ஆகிவற்றில் சிக்கி பலியாகியிருக்கின்றன. இந்த மோதல்கள் அனைவராலும் பேசப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பல தனியார் அமைப்புகள் போதிய அனுமதியின்றி பெரிய அளவில் கட்டடங்களை வனப்பகுதியை ஒட்டி கட்டியுள்ளது இந்த மோதல்களுக்கு முக்கிய காரணம் என்று வனத்துறை தெரிவிக்கிறது.
இக்கரை போளுவாம்பட்டி காப்புக்காடுகளை ஓட்டி அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் மனநல மேம்பாடு குறித்த சேவையை கடந்த 30 ஆண்டுகளாக செய்துவருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான யோகா விரும்பிகளை ஈர்க்கும் இந்த மையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். 113 ஏக்கரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் புலங்கள் சாடிவயல்- தாணிக்கண்டி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது என்கிறது வனத்துறையின் ஆவணங்கள். இதன் காரணமாகவே யானைகள் அடிக்கடி காட்டைவிட்டு வெளியே வந்து விளை நிலங்களை சேதப்படுத்திவருகிறது என்கிறது வனத்துறையின் அறிக்கை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி, போதிய துறைகளின் அனுமதியின்றி, கட்டுமானங்களை நிறுவியுள்ளது உலகப்புகழ் பெற்ற ஈஷா யோகா மையம் என அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலுக்கு ஈஷா மட்டும் காரணமல்ல, போதிய அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா விடுதி, சின்மையா சர்வதேச உறைவிட பள்ளி உள்ளிட்ட 15 அமைப்புகளும் காரணம். இப்போது ஈஷா யோகா மையத்தின் விதிமுறை மீறல்களை முதலில் பார்ப்போம்.
ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடம் மலையிடப் பாதுகாப்பு குழுவின் கீழ் வரும் பகுதி. இந்த வன எல்லையை ஒட்டி கட்டடங்கள் கட்ட தொடங்குவதற்கு முன்பாகவே மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 69 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்களை ஈஷா யோகா மையம் இதுவரை வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில், கட்டிடங்களுக்கு போளுவாம்பட்டி ஊராட்சியிடம் உரிய அனுமதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாயிரம் சதுர அடிக்குமட்டும்தான் ஊராட்சி அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கும் ஊராட்சி தலைவர் சதானந்தம், யானைகள் தொல்லை அதிகரித்துவருவதாக கவலை தெரிவிக்கிறார்.
ஈஷாவின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் காடுகளைவிட்டு வெளியே வருதாக வனத்துறை ஆவணம் தெரிவிக்கிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த நரசீபுரம் ஊராட்சி தலைவர் முரளியும் உறுதிப்படுத்துகிறார்.
இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில் தங்களது நடவடிக்கைகளால் வனத்திற்கும், யானைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அமைப்புகளை மதிக்காத ஈஷா? ஈஷா அமைப்பு கட்டியுள்ள 60 கட்டடங்களும், கட்டிவரும் 34 கட்டுமான பணிகளுக்கும் உரிய அனுமதியளிக்க கோரி நகர் ஊரமைப்புதுறைக்கு கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறது. அனைத்து கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நகர் ஊரமைப்புதுறை உத்தரவிட்டது. ஆனால் அதை ஈஷா யோகா மையம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நகர் ஊரமைப்புதுறை நிறுத்த கடிதத்திற்கு பிறகு சூர்ய குண்டம் என்ற கட்டுமானத்தை நிறுவி அதை டிசம்பர் 22 ஆம் தேதி செயல்பாட்டிற்கு திறந்திருக்கிறது ஈஷா யோகா மையம். இது குறித்து கேட்டதற்கு நகர் ஊரமைப்புதுறையின் கடிதத்தை மதித்து கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டதாக ஈஷா யோகா மையம் விளக்கமளிக்கிறது. இன்னும் கட்டுமானப்பணிகளை தொடர்வதால், அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்றப்போவதாக டிசம்பர் 24ஆம் தேதி இறுதி கடிதம் ஒன்றை ஈஷாவிற்கு, நகர் ஊரமைப்புத்துறை அனுப்பியிருக்கிறது.
இண்டஸ் கல்லூரியின் விதிமீறல்கள்: இதேபோல், கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ளது இண்டஸ் பொறியியல் கல்லூரியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இண்டஸின் சுற்றுச்சுவர், முன்பக்க நுழைவு வாயில் ஆகியவை வன எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.
வனப்பகுதியை ஒட்டி 150 மீட்டர் buffer zone ஏன் விட வேண்டும் என்ற கேள்வி எழலாம். யானைகள் உயரமாக இருக்கும் பாறைகள் மீது ஏறுவதில்லை. வலசைக்கு சமதளம் தேவைப்படுகிறது. நீங்கள் பார்க்கும் இந்த பகுதியைப் போல் ஆக்கிரமிப்புகள் தொடரும் வரையில் யானை-மனித மோதல்கள் ஓயப்போவதில்லை.

ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கும் இண்டஸ் கல்லூரி நிர்வாகம் இதுவரை முக்கியமான துறைகளான வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை என்று அரசு துறைகளின் ஆவணங்கள் உறுதியாகச் சொல்கின்றன. இந்த கட்டடங்களை இடிக்கச்சொல்லி ஒரு நோட்டிசை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருகிறது ஆலந்துறை பேரூராட்சி.
விதிகளுக்கு புறம்பாக தாமிரா ரிசார்ட்ஸ்?
கோவையின் பிரபலமான பிரிக்கால் நிறுவனத்தினரால் நடத்தப்பட்டுவரும் தாமரா விடுதியின் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. பேரூராட்சி, நகர் ஊரமைப்புதுறை, வனத்துறை, என எந்த துறையிடமும் அனுமதி பெறாமல் தாமிரா விடுதி கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்ட பொது சம்பந்த துறைகளிடம் அனுமதிக்கு விண்ணபித்திருக்கிறோம் என்றார்.

உயரமான சுற்றுச்சுவர் அமைக்கலாமா?:மத்துவராயபுரம் நெல்லூர் வயலில் அமைந்திருக்கும், சின்மையா சர்வதேச உரைவிடப் பள்ளி மீதும் இதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிகளை புறக்கணித்துவிட்டு, சமீபத்தில் வன எல்லையை ஒட்டியே சின்மையா நிறுவனம் உயரமான சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கிறது. அதேபோல் அனுமதியின்றி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கிறது இந்த நிறுவனம். இந்த விதிமுறை மீறல்கள் குறித்து விளக்கம் கேட்டதற்கு பதில் இல்லை.
விதிகளை மீறிய அமிர்தானந்தாமயி?மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற்றுள்ள மாதா அமிர்தானந்தாமயி கல்வி நிறுவனமும் விதிகளை கடைபிடிக்கவில்லை. வனத்துறை தடையில்லாச் சான்று வழங்கும் பொது வன எல்லையிலிருந்து 150 மீட்டர் நீளத்திற்கு எவ்வித கட்டடிடமும், வேலியும் அமைக்க கூடாது என்ற நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், வன எல்லையை ஒட்டியே அமிர்தாமயி நிறுவனம் மின்வேலி அமைத்திருக்கிறது. அதேபோல், அந்தப்பகுதியில் நீர் நிலைகளையும் காக்க தவறி இருக்கிறது. இது குறித்து அமிர்தனந்தாமயி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.
யானைகளை விரட்டும் ஆபத்தான பணி:காட்டிலிருந்து வெளியே வரும் யானைகளை விரட்டும் பணி மிகவும் ஆபத்தானது. கோவைப்பகுதியில் தினமும் காட்டைவிட்டு வெளியே வந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட யானைகள் பாதுகாப்பு படையினருடன் புதிய தலைமுறை செய்திக்குழுவினர் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை இப்போது பார்க்கலாம். கோவை வனப்பகுதியில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் ஆயிரக்கணக்கான யானைகள் காட்டைவிட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துவருகிறன. 20 யானைகள் காட்டைவிட்டு வெளி வந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தற்போது தகவல் வந்திருக்கிறது.
கோவையில் தனியார் ஆக்கிரமிப்புகளை பார்த்து கோபப்படும் யானைகள் குடியிருப்புகள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. அப்படி 8 யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்திருக்கின்றன. அவைகளை வனத்துறையினர் பட்டாசு விட்டு விரட்டுவதை நேரடியாக பார்க்கலாம். வனத்துறையிருக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் தூங்கத இரவுகளாக இருக்கின்றன. தனியார் ஆக்கிரமிப்புகளால் யானைகள் வெளிவருகின்றன.
இதனால் மனித விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வனத்துறையினர்.
பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளை ஒட்டி தனியார் கட்டடங்கள் அமைவதை தடுக்க வேண்டிய அரசு அமைப்புக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. கட்டடங்களால், வனப்பகுதியின் தன்மை, சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அரசு அமைப்புகளுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? :பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கட்டங்களைக் கட்டினால் அவற்றை தடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுசூழல்துறை, நகர் ஊரமைப்புத்துறை இப்படி பல அமைப்புகள் இருந்தாலும், அனுமதியில்லாத கட்டடங்களை முறைப்படுத்த எந்த அமைப்பும் தயாராக இல்லை என்கிறார் இந்த முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களை சேகரித்த பொதுநல ஆர்வலர் சிவா.
மலைதள பாதுகாப்புக்குழு என்ன செய்கிறது?:2003 ஆம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட மலை தாலுக்காக்களில் கட்டடப்பணிகள் தொடங்க மலைதள பாதுகாப்புக்குழு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இந்த குழு கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் வேலையைமட்டும் செய்கிறது. சுற்றுச்சூழல் குறித்த பார்வை இதற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மாவட்ட ஆட்சியருக்கு என்ன பொறுப்பு?: மலைதள பாதுகாப்புக்குழு கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் அனுமதியில்லாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் இருக்கிறது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக கோவை மாவட்டத்தில் எழும்பியிருக்கும் கட்டடங்கள் குறித்து தமக்கு தெரியவரவில்லை என்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர்.
வனப்பகுதிகள் பாதுகாக்கப்படும்: இது குறித்து மலைதளக்குழுவின் தலைவரும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலரிடம் கேட்டபோது, நகர் ஊரமைப்புத்துறை சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை கண்காணித்து அகற்றிவருவதாக தெரிவித்தார். வனப்பகுதிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அந்த துறை தெரிவித்திருக்கிறது.
சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை அகற்ற உரிய நேரத்தில் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மனித-விலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
                                            .-பசுமை நாயகன்